St. Joseph's Churchபுனித சூசையப்பர் ஆலயம்திருவள்ளுவர் நகர், இலால்குடி, திருச்சி
1985 முதல்

ஆலய வரலாறு

1939 — 2023

1939

இலால்குடி பங்கானது இலால்குடியைச் சார்ந்த மணக்கால் என்ற இடத்தில்தான் 25.07.1939-ல் பங்கு தளமாக்கப்பட்டு, அருள்தந்தை T. ஆரோக்கியசாமி அவர்கள் முதல் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். 1985-ம் ஆண்டுவரை மணக்கால் தான், இலால்குடி பங்குக்குத் தலைமையிடமாக இருந்து வந்தது.

இலால்குடி தாலுக்காவாக உயர்த்தப்பட்டவுடன் நகரமாக விரிவடைந்து, மக்கள் தொகையும் பெருகி, புதிய குடியிருப்புகள் தோன்றின. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வேலையினிமித்தமும், வசதியின் காரணமாகவும் இங்கு பெருமளவில் குடியேறினர். இவர்கள் யாவரும் மணக்கால் ஆலயத்துக்கு வழிபாட்டிற்குச் செல்ல சாத்தியப்படவில்லை. ஆகவே, மணக்கால் தனிப்பங்காகவும், இலால்குடி தனிப்பங்காகவும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.

1976 – 1985

முன்னாள் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி ஆண்டகை அவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 1976-ம் ஆண்டிலேயே அருள்தந்தை P. ஜோசப் வழியாக இலால்குடி, திருவள்ளுவர் நகரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கினார். அவருக்குப் பிறகு அருள்தந்தை A. லூர்துசாமி அவர்கள் மணக்கால் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டு, இலால்குடி-யில் பங்குத்தந்தை இல்லம் எழுப்பிக் கொண்டிருந்த போது இதய நோயால் இறைவனடி சேர்ந்தார். அவருக்குப் பின் அருள்தந்தை. தங்கசாமி (1982-1993) அவர்கள் பங்கின் பொறுப்பை ஏற்றார். பொலிவுற்று விளங்கும் புனித வளனார் ஆலயம், பங்குத் தந்தை இல்லம். சுற்றுச் சுவர் அனைத்தையும் சிறப்புற கட்டிமுடித்தார். 09.06.1985-ல் புதிய ஆலயம் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

1985 – 1992

1985 ஆம் ஆண்டு முதல் இலால்குடி புனித சூசையப்பர் ஆலயமானது தனிப் பங்காக உருவானது. மணக்காலில் இருந்து கொண்டு இங்கு பணிபுரிந்த அருள்தந்தை தங்கசாமி அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். புனித சூசையப்பர் மக்கள் மன்றமும் அருள்தந்தை தங்கசாமி பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 20.04.1992 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மறைவட்டம்

இலால்குடி மறைவட்டம்

1990

கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை பணிபுரிந்த போது, போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு அதுவரையில் மறைவட்ட தலைமையகமாக இருந்து வந்த புறத்தாகுடி மாற்றப்பட்டு, 1990 ஆம் ஆண்டில் இலால்குடி மறைவட்டமாக அறிவிக்கப்பட்டு, இலால்குடி பங்குதந்தை அருட்பணி. தங்கசாமி அடிகளார் மறைவட்ட முதல்வராக பணியமர்த்தப்பட்டார்.

2023

பங்குத்தந்தை பேரருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, 29.09.2023 அன்று மேதகு ஆயர் F. அந்தோணிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.